

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டையை அடுத்த வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ரவிச்சந்திரனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் கூடா நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கணவருடன் தகராறு ஏற்பட்டதால், லதா கோபித்துக் கொண்டு, அதே ஊரில் உள்ள தனது தந்தை சைவராசு(77) வீட்டுக்குச் சென்றுவிட்டார். மேலும், இவர்களது விவகாரத்து வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அதில்,மகள்கள் இருவரும் தாயின் பராமரிப்பில் இருக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
அதன்பின், லதா, தனது தந்தைசைவராசுவுடன் நீதிமன்றத்தில் இருந்து ஊருக்கு சென்றார். வடுகப்பட்டியில் பேருந்தில் இருந்துஇறங்கி நடந்து சென்று கொண்டிருந்த சைவராசுவை, ரவிச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டதில், அந்தஇடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதைத் தடுக்க முயன்ற அதேஊரைச் சேர்ந்த முருகேசனையும் ரவிச்சந்திரன் துப்பாக்கியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைக் கண்டித்து சைவராசுவின் உறவினர்கள் வடுகப்பட்டி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.