Published : 26 Nov 2022 07:37 AM
Last Updated : 26 Nov 2022 07:37 AM

தாம்பரம் | ஜூஸ் கடை உரிமையாளர் கடத்தல்: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளரை கடத்தியது தொடர்பாக, அதே மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் உசேன். இவர், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி இரவு இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் திரிபுரா மாநில போலீஸார் எனவும், வழக்கு ஒன்று சம்பந்தமாக தங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறி, முகமது அன்வர் உசேனை கண்ணை கட்டி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், தங்களுக்கு ரூ.5 லட்சம் பணம் வேண்டும். கொடுக்க மறுத்தால் கொலை செய்து விடுவோம் என் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், அச்சமடைந்த அவர் தனது வங்கி கணக்கில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, புகாரின்பேரில் தாம்பரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இ்ந்நிலையில், கேளம்பாக்கம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த வாகனத்தை போலீஸார் மடக்கி விசாரித்தனர். இதில், காரில் இருந்தது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அல்காஸ்மியா, ஜலீல்மியா, பெர்வெஜ் மியா என்பது தெரிந்தது.

மேலும், விசாரணையில் அவர்கள் இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும், வசதியாக உள்ள தங்களுக்கு தெரிந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நபர்களை குறிவைத்து, கடத்தி சென்று பணம் பறித்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய திரிபுரா மாநிலத்துக்கு தப்பி சென்ற 3 பேரை கைது செய்ய தனிப்படை போலீஸார் திரிபுரா சென்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x