

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேகப்பியாம்புலியூர் கிராமத்தைச்சேர்ந்தவர் ஆதித்யன் (45). பாமகவில் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கும், இவரது உறவினர் லட்சுமி நாராயணன் தரப்பினருக்கும் தேர்தல் முன்விரோதம் மற்றும்பாலம் கட்டும் பணி சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆதித்யன் பனையபுரத்திலிருந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் எதிரே உள்ள வாதானூரான் வாய்க்கால் அருகே வந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவஇடத்துக்கு சென்று உடலைகைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட எஸ்பி நாதா, டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் சம்பவஇடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.இதுகுறித்து ஆதித்யன் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உறவினர்கள் லட்சுமிநாராயணன், ராமு, விஷ்ணு, நாராயணமூர்த்தி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.