Published : 26 Nov 2022 06:20 AM
Last Updated : 26 Nov 2022 06:20 AM

அருப்புக்கோட்டை | திருச்சுழி அருகே 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே உறவினர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். திருச்சுழி அருகே உடையனம்பட்டியைச் சேர்ந்தவர் சபரி(38), குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் ரத்தினவேல்பாண்டியன்(32). இரு வரும் உறவினர்கள். இவர்களைக் கடந்த 2 நாட்களாகக் காணவில்லை என திருச்சுழி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அடுத்துள்ள பி.தொட்டியாங்குளம் செல்லும் சர்வீஸ் சாலை அருகே முனியப்ப சுவாமி கோயில் காட்டுப் பகுதியில் சபரி, ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது: திருச்சுழி அருகே உள்ள உடையனம்பட்டியில் திமுக மகளிர் அணி துணை செயலாளராக இருந்தவர் ராக்கம்மாள்(52). இவர் ஊராட்சி மன்றத் தலைவியாகவும் இருந்தார். இவர் தனது அக்காள் மகள் சோலைமணியை தத்தெடுத்து வளர்த்தார். சோலைமணி நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார் ராக்கம்மாள்.

திருமணம் முடிந்த சில நாட்களில் இவர்கள் பிரிந்தனர். இதற்கு ராக்கம்மாள்தான் காரணம் என எண்ணிய மூர்த்தி கடந்த 12.3.2022 அன்று வீட்டில் தனியாக இருந்த ராக்கம்மாளை குத்திக் கொலை செய்தார்.

இது தொடர்பாக மூர்த்தி, அவரது தந்தை, தாய், தம்பிகள் சபரி, செல்வம் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் சபரி, செல்வம், மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சில மாதங் களுக்கு முன் ஜாமீனில் வந்துள்ளனர்.

உறவினர் ரத்தினவேல்பாண்டியன் வீட்டில் சபரி தங்கியிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரையும் காணவில்லை எனப் போலீஸார் தேடி வந்தபோது அருப்புக்கோட்டை அருகே கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் மனோகர் நேரில் விசாரணை நடத்தினார்.

இவர்கள் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டார்களா என்று திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன், அருப்புக்கோட்டை ஆய்வாளர்கள் பாலமுருகன், சோபியா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x