

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த பசுங்காயமங்கலம் தனியார் பள்ளியில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளியின் உரிமையாளரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பசுங்காயமங்கலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபெருமாள் நர்சரி மற்றும் பிரைமரி தனியார் பள்ளியை ஓய்வுபெற்ற தலைமையாசிரியாரான ராஜமாணிக்கம் நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை நடத்தப்படும் இப்பள்ளியில் மாணவிகளிடம், பள்ளியின் உரிமையாளரும், தாளாளருமான ராஜமாணிக்கம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளியில் நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை முறையிட்ட போது, பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜாமணிக்கத்தை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்துனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.