Published : 25 Nov 2022 08:58 AM
Last Updated : 25 Nov 2022 08:58 AM

பாலியல் புகார்: திருவள்ளூர் தனியார் பள்ளி தாளாளர் மகன் கோவாவில் கைது

கைது செய்யப்பட்ட வினோத் (இடது), சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் (வலது)

பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த திருவள்ளூர் தனியார் பள்ளி தாளாள மகன் வினோத் கோவாவில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர்- லட்சுமிபுரம் பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளியின் தாளாளர் மகன் வினோத் (38), கவுன்சிலிங் அளிப்பதாகக் கூறி பிளஸ் 2 மாணவிகள் இருவரை தனி அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவிகள் மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில். சில நாட்களுக்கு முன்னர் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள், பள்ளி தாளாளர் மகன் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட பெற்றோரும் வந்து மாணவ-மாணவிகளுடன் முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி காவல் உதவி ஆணையர்கள் சதாசிவம் மற்றும் புருஷோத்தமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடம் விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் வினோத் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இச்சூழலில் அவர் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் வினோத் கோவாவில் பதுங்கியிருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். அவரை தமிழகம் அழைத்துவந்த போலீஸார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x