

புதுடெல்லி: மும்பையைச் சேர்ந்த அப்தாப் மற்றும் ஷிரத்தா ஆகிய இருவரும் டெல்லியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம் ஷிரத்தாவை கொலை செய்த அப்தாப், உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸார், அப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக ஷிரத்தா உடல் பாகங்களை வீசியதாகக் கூறப்படும் மஹரவுலி வனப்பகுதி உட்பட பல இடங்களுக்கு அப்தாப்பை அழைத்துச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்கெனவே சில உடல் பாகங்கள் கிடைத்த நிலையில், தலையின் பாகங்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வனப்பகுதியில் மண்டை ஓடு மற்றும் சில எலும்புகளை போலீஸார் மீட்டுள்ளனர்.
இதற்கிடையில் மஹரவுலி பகுதியில் உள்ள மைதான் கர்ஹி குளத்தில் ஷிரத்தாவின் உடல் பாகங்களை வீசியதாக அப்தாப் கூறியுள்ளார். இதையடுத்து அந்தக் குளத்தில் உள்ள நீரை வடித்துவிட்டு ஷிரத்தாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் ஒரு குழுவை ஈடுபடுத்தி உள்ளனர்.
அப்தாப் அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், அவரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.