அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மென்பொருளை செயலிழக்க செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது

அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மென்பொருளை செயலிழக்க செய்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது
Updated on
1 min read

சென்னை: கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை செயலிழக்க செய்த தனியார் நிறுவனம் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருள், அதை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக, ஒளிபரப்பில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துமீறி இணைய வழியில் நுழைந்து, 22 லட்சம் செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை செயலிழக்க செய்த நிறுவனம் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்பக் குழு உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து, அதை இயக்குவது குறித்தும் விளக்கப்பட்டு, இந்த சிக்கலுக்கு தற்காலிக தீர்வும் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மென்பொருள் வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சினைகளை சரிசெய்து, சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவிநிறுவனம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தற்காலிக பிரச்சினையை சரிசெய்யும் வரை ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப உதவிக்கு துணை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு மாரிமுத்து (செல்போன் எண்: 9498017289), கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுரேஷ் (9498017212), தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் மாவட்டங்களுக்கு கவுதம் ராஜ் (9498002607), அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு மும்தாஜ் பேகம் (9498017287) சென்னைக்கு அருள் பிரகாஷ் (9498017283) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மென்பொருளை செயலிழக்க செய்தது கிரிமினல் குற்றம் என்பதால், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in