

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனது வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை தீயிட்டு வீசி நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி(40). இந்து முன்னணி மாநகரச் செயலாளராக உள்ளார்.
இந்தநிலையில், தனது வீட்டின் முன் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை மர்ம நபர்கள் தீயிட்டு வீசிச் சென்றதாக கும்பகோணம் கிழக்கு போலீஸில் சக்கரபாணி நேற்று புகார் அளித்தார், மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா, ஏடிஎஸ்பிக்கள் உள்ளிட்ட போலீஸாரும், தடயவியல் துறையினரும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மோப்ப நாய் டாபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில், அது சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.
மண்ணெண்ணெய் நிரம்பிய கண்ணாடி பாட்டிலை வீசியிருந்தால் கண்ணாடி துண்டுகள் சிதறியிருக்கும். ஆனால், சக்கரபாணி வீட்டு வாசலில் கண்ணாடி துண்டுகள் சிதறாமல் ஒரே இடத்தில் உடைந்து கிடந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பாட்டிலில் எரிந்த நிலையில் இருந்த திரி, சக்கரபாணி வீட்டில் இருந்த போர்வையிலிருந்து கிழிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
சுய விளம்பரத்துக்காக: சக்கரபாணியை விசாரித்ததில், சுய விளம்பரத்துக்காகவும், போலீஸார் பாதுகாப்பு கிடைக்கவும் இச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதாக போலீஸார் கூறினர்.இதையடுத்து சக்கரபாணியை போலீஸார் கைது செய்தனர்.