

திருச்சி: திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இவ்வழக்கு குறித்த விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கு குறித்த விசாரணையில், சந்தேகப்படும்படியாக உள்ள 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் 6 -ல் இக்குழுவினர் மனு செய்தனர்.இந்த மனு மீது நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்த விசாரணையில், வழக்கில் ஆஜரான சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், லெப்ட் செந்தில், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் தென்கோவன் (எ) சண்முகம் மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சம்மதம் தெரிவித்த 12 பேருக்கும் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் 12 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையை மருத்துவக்குழுவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அப்போது அறிக்கையை வாசித்து பார்த்த நீதிபதி சிவக்குமார் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் இதற்கு ஆகும் போக்குவரத்து செலவை போலீஸார் ஏற்க வேண்டும் என்றும் சோதனையின்போது உடன் வழக்கறிஞர் ஒருவர் இருக்கலாம் என்றும் இந்த சோதனை அறிக்கையை 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நிபந்தனை விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து இவ்வழக்கு குறித்த அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 12 ரவுடிகளிடம் உண்மை தன்மை கண்டறியும் சோதனையை சென்னை அல்லது பெங்களூரூவில் மேற்கொள்ள புதுடெல்லியில் உள்ள ஆய்வகத்தில் சிறப்பு அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் புலனாய்வு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அனுமதி கிடைத்த பிறகு நாளொன்றுக்கு 2 பேரிடம் இச்சோதனை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.