

மோன்: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்ட சிறையிலிருந்து 9 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க நாகாலாந்து காவல்துறை தீவிர தேடுதலில் இறங்கியுள்ளது. தப்பியோடிய 9 கைதிகளில் இருவர் கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ள 7 பேர் விசாரணைக் கைதிகள் என்றும் நாகாலாந்து காவல் துறை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இரவு 1 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறை அறையின் சாவி அந்தக் கைதிகளிடம் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி சிறை அறையிலிருந்து வெளிவந்தவர்கள், தங்கள் கைவிலங்கு சங்கிலியை உடைத்துள்ளனர். பிறகு சிறையை விட்டு தப்பிச் செல்வதற்காக சிறை முகப்பில் உள்ள இரும்புக் கதவை உடைத்துள்ளனர் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாகாலாந்து காவல் அதிகாரி அபோங் யிம் கூறுகை யில், “சனிக்கிழமை அன்று மோன் மாவட்ட சிறையிலிருந்து 9 கைதிகள் தப்பியுள்ளனர். சிறையின் இரும்புக் கதவை உடைத்தும் கைவிலங்கை உடைத்தும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் இருவர் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். மற்ற 7 பேரும் விசாரணைக் கைதிகள். தப்பியோடியவர்களை தேடும் பணியில் நாகாலாந்து காவல் துறை மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அவர்கள் 9 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.