

கோவை: தருமபுரி மாவட்டம் பாலக் கோட்டை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (29). இன்ஜினியர். இவர், கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் எஸ்.டி. குளோபல் பிளேஸ்மென்ட் என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் வேலை உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை நம்பிய பலர் அவரை அணுகியபோது, வெளிநாட்டில் பணியில் சேர விசா, விமான டிக்கெட் கட்டணம் என அவர்களிடம் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் வசூலித்தார். வெளிநாட்டில் வேலையும் வாங்கி தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் இழுத்தடித்தார்.
இது தொடர்பாக 16 பேர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகரமத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தமிழ் செல்வனை கைது செய்தனர். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம், தமிழ்செல்வன் மீது மேலும் 30 பேர் புகார் அளித்தனர். அப்புகாரில், ‘‘எங்களிடம் நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் சூப்பர்வைசர் வேலை காலியாக உள்ளதாகக் கூறி, எங்களிடம் மொத்தம் ரூ.1 கோடி வரை தமிழ்செல்வன் கட்டணம் வசூலித்தார்.
சிலரிடம் வேலை தயாராகிவிட்டது என்று தெரிவித்ததுடன், டெல்லி செல்லும்படி அவர் தெரிவித்தார். இதனை நம்பி டெல்லி சென்ற பலர், அங்கேயே ஒரு மாதம் வரை தங்கி ஏமாற்றத்துடன் திரும்பினர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்,’’ என தெரிவித்துள்ளனர்.