மத்திய பிரதேசத்தில் கொடூரமாக பெண் கொலை: வீடியோ வெளியிட்டவரை தேடும் போலீஸ்

மத்திய பிரதேசத்தில் கொடூரமாக பெண் கொலை: வீடியோ வெளியிட்டவரை தேடும் போலீஸ்
Updated on
1 min read

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இளம்பெண் ஒருவரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டெல்லியில் காதலியை, அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் மற்றொரு கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள மேகலா என்ற ஓட்டலில், அபிஜித் படிதார் என்பவர் கடந்த 6-ம் தேதி அன்று தனியாக வந்து தங்கினார். மறுநாள் அவரைப் பார்க்க சில்பா ஜாரியா(25) என்ற இளம் பெண் வந்துள்ளார். மதியம் இருவரும் அதே ஓட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அபிஜித் அறைக் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. மறுநாள் ஓட்டல் நிர்வாகத்தினர், அறைக் கதவை திறந்து பார்த்தபோது, அங்கு சில்பா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீஸார் அபிஜித்தை தேடிவரும் நிலையில், அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஏமாற்றாதே...’ என்ற தலைப்பு கொடுத்து வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அபிஜித் போர்வை ஒன்றை விலக்கி, சில்பா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் படுக்கையில் கிடப்பதை காட்டுகிறார். மற்றொரு வீடியோவில், ‘‘நான் பாட்னாவைச் சேர்ந்த வியாபாரி. சில்பா ஜாரியா என்னுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஜித்தேந்திர குமார் என்பவரிடமும் நெருங்கி பழகியுள்ளார்.
ஜித்தேந்திராவிடம் ரூ.12 லட்சத்தை வாங்கிக் கொண்டு சில்பா ஜபல்பூர் வந்துவிட்டார். ஜித்தேந்திரா கூறியபடிதான், நான் சில்பாவை கொலை செய்தேன்” என அந்த வீடியோவில் அபிஜித் கூறியுள்ளார்.

மூன்றாவது வீடியோவில், ‘‘டியர்.. நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்” என அபிஜித் கூறியுள்ளார். இது தொடர்பாக அபிஜித் நண்பர் ஜித்தேந்திரா, அவரது நண்பர் சுமித் படேல் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அபிஜித்தை தேடி தனிப்படை போலீஸார் மகாராஷ்டிரா, குஜராத் சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in