

சென்னை: முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவிக்கும், அவருடைய முன்னாள் காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த வினோதினியும், விளாத்திகுளம் அருகே குருவார்பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் கடந்த 2018 செப்டம்பரில் வினோதினியை, அவரது பெற்றோர், தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கதிரவனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு புதிய தம்பதி சென்னையில் வசித்து வந்த நிலையிலும் வினோதினிக்கும், அந்தோணி ஜெகனுக்கும் ரகசியமாக தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2018 அக்.12 அன்று தனது கணவரான கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்ற வினோதினி, அங்கு கணவரின் கண்களைத் துணியால் கட்டி கண்ணாமூச்சு விளையாடியுள்ளார். அப்போது ஏற்கெனவே அங்கு மறைந்து இருந்த வினோதினியின் முன்னாள் காதலனான அந்தோணி ஜெகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கதிரவனை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
பின்னர், தனது தாலியைப் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தனது கணவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பியதாக வினோதினி நாடகம் ஆடியதை திருவான்மியூர் போலீஸார் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கண்டுபிடித்தனர். பின்னர் வினோதினி மற்றும் அந்தோணி ஜெகனை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன், குற்றம்சாட்டப்பட்டுள்ள வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.