

திருச்சி: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு விறுவிறுப்பை அடைந்து வரும் இவ்வழக்கு குறித்த விசாரணையில் ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புலனாய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்.6-ல் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதி சிவக்குமார் முன்னிலையில், இந்த வழக்கானது நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி நடந்த முதல் விசாரணையின் போது ரவுடிகள் மோகன்ராம், தினேஷ், சாமிரவி, நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா என்ற குணசேகரன், செந்தில் ஆகிய 13 பேரும் ஆஜராகினர்.
இதையடுத்து கடந்த 7-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது உண்மை கண்டறியும் சோதனைக்கு புலனாய்வு குழுவினரால் முறையான அறிக்கையும், பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யவில்லை என ரவுடிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு குறித்த விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஆஐரான ரவுடிகள் சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் தென்கோவன் (எ) சண்முகம் மட்டும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அன்றைய தினம் ஆஜராகாத ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் 17-ம் தேதி ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நடைபெற்ற விசாரணையின் போது ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேரும் ஆஜராகி சோதனையின் போது மருத்துவர் ஒருவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதி அளிப்பதாகவும், அன்றைய தினம் சம்மதம் தெரிவித்துள்ள 12 பேரின் மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் உரிமையாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.