

புதுடெல்லி: டெல்லியில் கொலை செய்யப்பட்ட ஷிரத்தாவின் தலையை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தலைப்பகுதி கிடைத்தால் மட்டுமே வழக்கில் விசாரணை விரைவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வஸய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷிரத்தா(26). இவர் மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்து வந்தபோது, அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற இளைஞரைக் காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஷிரத்தா பெற்றோரை விட்டுப் பிரிந்து வஸய் பகுதியில் காதலனுடன் தனியாக `லிவிங் டுகெதர்' முறையில் வசித்து வந்துள்ளனர். அப்தாப், ஓட்டலில் சமையல் வேலை பார்த்து வந்தார். பின்னர் டெல்லியில் வேலை கிடைத்தவுடன் அங்கு இருவரும் சென்று குடியேறி உள்ளனர்.
இந்நிலையில் ஷிரத்தா, காதலன் அப்தாபால் கொலை செய்யப்பட்டு உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டதோடு, உடல் பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் 18 நாட்கள் வைத்திருந்து காட்டில் வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஷிரத்தாவுடன் டெல்லி சென்ற பிறகு அப்தாப் வேறு பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி வந்துள்ளார். இது ஷிரத்தாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இந்நிலையில் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி அப்தாபை வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் கடந்த மே மாதம் 18-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷிரத்தாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் அப்தாப். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டியதும், உடல் பாகங்களை வைப்பதற்காக ஆன்லைனின் ஆர்டர் செய்து ஃபிரிட்ஜ் வாங்கியதும் தெரியவந்தது.
ஃபிரிட்ஜில் அடைத்து வைத்த உடல் பாகங்களில் சிலவற்றை நள்ளிரவு 2 மணியளவில் எடுத்துச் சென்று நாய்களுக்கு அப்தாப் போட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட அப்தாபிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்துவதற்காக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், அப்தாபுக்கு நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே ஷிரத்தாவை, மே 18-ம் தேதி கொலை செய்ததாக அப்தாப் தெரிவித்திருந்தபோதும், அதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் ஷிரத்தாவின் தலையைத் தனியாக வெட்டியெடுத்து ஃபிரிட்ஜில் அப்தாப் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அவ்வப்போது, ஷிரத்தாவின் தலையைஃ பிரிட்ஜிலிருந்து அவர் எடுத்து பார்த்துவந்துள்ளார். பின்னர் இந்தத் தலையை அவர் எடுத்து வனப்பகுதியில் வீசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஷிரத்தாவின் உடல் பாகங்கள், தலை உள்ளிட்ட பகுதிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தெற்கு டெல்லியில் உள்ள மஹரவுலி வனப்பகுதிக்கு, அப்தாபை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்தப் பகுதியில்தான் ஷிரத்தாவின் உடல்பாகங்களை நாய்களுக்கு வீசியுள்ளார் அப்தாப். இதுவரை ஷிரத்தாவின் சில உடல் பாகங்கள் சிக்கியுள்ளதாவும், அவை 10 பைகளில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஷிரத்தாவின் தலையைத் தேடும் பணியில் தற்போது போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஷிரத்தாவின் தலைப்பகுதி கிடைத்தால் மட்டுமே அது விசாரணையை நிறைவுறச் செய்ய உதவும் என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அதாவது, உடல்பாகங்களை துண்டுதுண்டாக வெட்டியிருந்தாலும், ஷிரத்தாவின் தலையை, அப்தாபால் வெட்டி யிருக்க முடியாது என்று நம்பும் போலீஸார், தலையை மீட்டால் மட்டுமே, கொலை செய்யப்பட்டது ஷிரத்தா என்பதை உறுதி செய்ய முடியும். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் சாட்டர்பூர் பகுதியில் ஷிரத்தா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமையலறையில் ரத்தக் கறைபடிந்துள்ளதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர்களது குடியிருப்பில் ஏராளமான புத்தகங்கள் இருந்ததாகவும், அவை அனைத்தையும் அப்தாப்தான் படிப்பார் என்றும் தெரியவந்துள்ளது.
வங்கிக் கணக்கு: இந்நிலையில் ஷிரத்தா கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.54 ஆயிரத்தை அப்தாப் தனது கணக்குக்கு மாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷிரத்தா கொலை விவகாரம் தெரியவந்த பின்னர், ஷிரத்தாவின் வங்கிக் கணக்குகளை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது இந்த உண்மை தெரியவந்தது.
மே, 22-ம் தேதிக்குப் பிறகு ஷிரத்தாவுடன் தொடர்பில் இல்லை என்று அப்தாப் போலீஸில் கூறியுள்ளார். ஆனால், மே 24-ம் தேதி அவரது வங்கிக் கணக்கிலிருந்து அப்தாபுக்கு பணம் சென்றுள்ளது. இதன்மூலம் அப்தாப் கூறிய தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததைக் கண்டறிந்த போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், ஷிரத்தாவின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளக் கணக்கு மே 31-ம் தேதி வரை ஆக்டிவாக இருந்துள்ளது. இதையும் அப்தாப்தான் செய்து வந்துள்ளார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதற்கு முன்பு அக்டோபரில் 2 முறையும், நவம்பரில் ஒரு முறையும் போலீஸார் அப்தாபை அழைத்து சாதாரண முறையில் விசாரித்துள்ளனர்.
அப்போது போலீஸாரிடம் எந்தவித பதட்டமும் இல்லாமல் பதில்களை அளித்துள்ளார் அப்தாப். இதனால் அவர்களுக்கு அப்தாப் மேல் முதலில் சந்தேகம் வரவில்லை. ஷிரத்தா வங்கிக் கணக்கிலிருந்து பணம் அப்தாப் வங்கிக் கணக்குக்கு வந்தது குறித்து போலீஸார் கேட்டபோது, அவர் தெரிவித்த தகவல்களில் முரண் இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்தே போலீஸா ரிடம் சிக்கியுள்ளார் அப்தாப்.