

சென்னை: காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி பொன்ராஜ் (52). அவருக்கும் அவரது மனைவியின் தங்கை மகன் அற்புதராஜ் (32) என்பவருக்கும் தூத்துக்குடியில் உள்ள சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அதிகாலை அற்புதராஜ், நண்பர்கள் இருவருடன் வீடு புகுந்து பொன்ராஜை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து அற்புதராஜை மறுநாள் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த அற்புதராஜின் கூட்டாளிகளான தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி வாண்டு மணி, சுப்பிரமணி ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.