Published : 16 Nov 2022 07:05 AM
Last Updated : 16 Nov 2022 07:05 AM

டெல்லி வனப்பகுதியில் ஷிரத்தாவின் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு - தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்ததாக அஃப்தாப் வாக்குமூலம்

புதுடெல்லி: டெல்லி வனப்பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவின் 10 உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவரது தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ரசித்த கொடூர காதலன் அஃப்தாபிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மஹரவுலி பகுதியில் இளம்பெண் ஷிரத்தாவை அவரது காதலன் அஃப்தாப் அமீன் பொன்னவாலா கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி நாய்களுக்கு வீசிய கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஃப்தாபிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் வஸய் மேற்கு பகுதியில் சன்ஸ்கிருதி குடியிருப்பில் தாய், தந்தை, தம்பியுடன் ஷிரத்தா வசித்து வந்தார். அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார்.

கடந்த 2018-ம் ஆண்டில், ‘டேட்டிங்' செயலி மூலமாக அஃப்தாப் அமீன் பொன்னவாலாவுடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. அஃப்தாபின் வீடு ஷிரத்தாவின் வீட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருந்துள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றினார்.

இருவரின் காதலை ஷிரத்தாவின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் மும்பையில் தனியாக வசித்த அவர்கள், கடந்த மே 8-ம் தேதி டெல்லி மஹரவுலி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர்.

கடந்த மே 18-ம் தேதி ஷிரத்தாவை, அஃப்தாப் கொலை செய்துள்ளார். அவரது நெஞ்சில் அமர்ந்து தலையணையால் ஷிரத்தாவின் முகத்தை நீண்ட நேரம் அழுத்தி உள்ளார். இதில் மூச்சுத் திணறி ஷிரத்தா உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை குளியல் அறைக்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளார். பின்னர் கிரெடிட் கார்டு மூலம் பிரிட்ஜை வாங்கிய அவர், மற்றொரு கடையில் இறைச்சி வெட்ட பயன்படுத்தும் 5 கத்திகளை வாங்கி உள்ளார். அந்த கடைக்காரர் அஃப்தாப் கத்திகளை வாங்கியதை உறுதி செய்துள்ளார்.

வீட்டின் குளியல் அறையில் வைத்து ஷிரத்தாவின் உடலை 35 துண்டுகளாக அஃப்தாப் வெட்டியுள்ளார். இதில் குடல் உள்ளிட்ட பாகங்களை அன்றிரவே அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று நாய்களுக்கு வீசியுள்ளார். மீதமுள்ள உடல் பாகங்களை கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளார். அவ்வப்போது பிரிட்ஜை திறந்து ஷிரத்தாவின் தலையை பார்த்து ரசித்து உள்ளார்.

காலையில் வெளியே செல்லும் அஃப்தாப் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு அலாரம் வைத்து எழும்பி வீட்டின் அருகே வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று ஷிரத்தாவின் உடல் பாகங்களை நாய்களுக்கு வீசி உள்ளார். தொடர்ச்சியாக 18 நாட்கள் அவர் உடல் பாகங்கள் வீசி அழித்திருக்கிறார்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். நான்தான் கொலை செய்தேன் என்று எவ்வித பதற்றமும் இன்றி அஃப்தாப் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தியில் பேசுவதை தவிர்க்கும் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். மஹரவுலி வனப்பகுதியில்அவரை அழைத்து சென்று உடல் பாகங்களை தேடி வருகிறோம். இதுவரை 10 உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். ஷிரத்தாவின் தலையை தொடர்ந்து தேடி வருகிறோம். எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் அஃப்தாபை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்வேறு பெண்களுடன் காதல்: ஷிரத்தாவை கொலை செய்த பிறகு அஃப்தாப் மிகவும் இயல்பாக இருந்துள்ளார். மீண்டும் டேட்டிங் செயலி வாயிலாக புதிய பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்களில் ஒரு பெண்ணை டெல்லி மஹரவுலியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் ஷிரத்தாவின் உடல் பாகங்கள் பிரிட்ஜில் இருந்துள்ளன. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அஃப்தாப் காதல் மன்னனாக வலம் வந்துள்ளார்.

பம்பிள் என்ற டேட்டிங் செயலி மூலம் அஃப்தாப் பெண்களிடம் பழகி வந்துள்ளார். இந்த செயலியில் பெண்கள் மட்டுமே தங்களுக்கு விருப்பமான ஆண்களை தேர்வு செய்து உரையாட முடியும். அந்த வகையில் யார், யாரெல்லாம் அஃப்தாபுடன் தொடர்பில் இருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்களை அந்த செயலியின் நிர்வாகத்திடம் போலீஸார் கோரியுள்ளனர். அஃப்தாபுடன் தொடர்பில் இருந்த பெண்களில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் பேச்சை கேட்டிருந்தால்.. தந்தை கண்ணீர்...: ஷிரத்தாவின் தந்தை விகாஸ் மதன் கூறியதாவது: அஃப்தாபுடன் ஷிரத்தா பழகி வருவது 18 மாதங்களுக்கு பிறகே எங்களுக்கு தெரியவந்தது. கடந்த 2019-ம் ஆண்டில் நானும் எனது மனைவியும் ஷிரத்தாவை கண்டித்தோம். மதம் மாறி, ஜாதி மாறி திருமணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினோம். எங்கள் பேச்சை ஷிரத்தா கேட்கவில்லை.

‘எனக்கு 25 வயதாகிவிட்டது. என் வாழ்வை நானே முடிவு செய்வேன்' என்று கூறிவிட்டு அஃப்தாபுடன் சென்றுவிட்டாள். எனது மனைவி எவ்வளவோ கெஞ்சியும் ஷிரத்தாவின் மனம் மாறவில்லை. இந்த கவலையில் கடந்த 2021-ம் ஆண்டில் எனது மனைவி இறந்துவிட்டாள். பிறகு எனது மகள் சிலமுறை என்னுடன் பேசினாள். அப்போது அஃப்தாப் அடித்து துன்புறுத்துவதாக கூறினாள். மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுமாறு அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை.

எனது மகளை ஏமாற்றி கொடூரமாக அஃப்தாப் கொலை செய்துள்ளான். லவ் ஜிகாத் அடிப்படையில் விசாரணை நடத்தி அவனை தூக்கிலிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x