

கோவை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய்(35). கோவை தியாகி குமரன் வீதியில் வாடகை வீட்டில் தங்கி தங்க நகை பட்டறையில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டில் சமைப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
ஏற்கெனவே எரிவாயு கசிவு ஏற்பட்டிருந்ததால், அறையில் தீப்பற்றியது. இதில் பிஜாய்க்கு தீக்காயம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் மேற்கூரை தீயில் சேதமடைந்தன. அக்கம்பக்கத்தினர் பிஜாயை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ஆர்எஸ்புரம் காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், சமையல் எரிவாயு சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.