Published : 12 Nov 2022 06:13 AM
Last Updated : 12 Nov 2022 06:13 AM

ரஷ்ய கப்பலில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி: ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட 3 பேரிடம் ரஷ்ய நாட்டு வணிகக் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5.60 லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதுகுளத்தூரைச் சேர்ந்த வேல் முருகன் மகன் இளங்கோவன்(21). இவர் கப்பல் பொறியியலில் பட்டயப் படிப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

அப்போது, அவரது நண்பர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன், முகநூலில் வெளிநாட்டு வணிக கப்பலில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து, அதற்கான மொபைல் எண்ணை இளங்கோவனிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இளங்கோவன் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரது ஆவணங்களை அந்த நபர் அனுப்பக் கூறியுள்ளார். அதன்பின் ரஷ்ய நாட்டு வணிகக் கப்பலில் வேலை என்றும், நவம்பர் 7-ல் தூத்துக்குடி துறைமுகம் மூலம் வேலைக்கு அனுப்பு வதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய இளங்கோவன், அவர் கூறிய வங்கிக்கணக்கில் கூகுள் பே மூலம் கடந்த அக்டோபர் 3-ல் ரூ.2 லட்சம் அனுப்பினார்.

அதேபோல் வாஞ்சிநாதனின் நண்பர் களான பெரம்பலூரைச் சேர்ந்த வெங்கடேஷ், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த கிஷோர் ஆகியோர் தலா ரூ. 1.80 லட்சம் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு அனுப்பினர். அந்த நபர் நவம்பர் 8-ல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரச் சொன்னார்.

அதை நம்பி இளங்கோவன் உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்குடி துறைமுகம் சென்றனர். அங்கு சென்று அவர் கொடுத்த ஆவணங்களை துறைமுக அதிகாரிகளிடம் காட்டியபோது, அவை போலி என்று தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் அந்நபரை தொடர்பு கொண்டபோது அவர் கூடு தலாக பணம் அனுப்பும்படி கூறியுள்ளார். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்து 3 பேரும் பணத்தை மீட்டு தரும்படி தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x