

சென்னை: வங்கியில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி பெண்கள் உட்பட 4 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் லஷ்மி (31). இவரை சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அந்த கடனை பெறுவதற்கு காப்பீடு தொகையாக ரூ.31,500 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதை உண்மையென நம்பியலஷ்மி, கூகுள் பே மூலம் அந்தப்பெண்ணுக்கு ரூ.31,500 அனுப்பியுள்ளார். ஆனால், உறுதி அளித்தபடி கடன் கொடுக்கவில்லை. மேலும், பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த லஷ்மி, இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கே.கே.நகரைச் சேர்ந்த அரவிந்த் (22), பழவந்தாங்கல் பால்ஜோசப் (27), பட்டதாரிகளான அயனாவரம் தெசரா (22), எண்ணூர் வினிதா (21) ஆகியோர்தான் பண மோசடியில் ஈடுபட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும்தனியார் கால் சென்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் 4 பேரும் கூட்டு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும்நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.