

கோவை: திருப்பூரில் இருந்து கோவை நோக்கி பேருந்தில் வந்த பயணியிடம் கணக்கில் வராத தொகை ரூ.80 லட்சம் தொகையை பறிமுதல் செய்த போலீஸார், அது ஹவாலா தொகையா என விசாரித்தனர். பின்னர், அத்தொகை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி இன்று (நவ.10) ஒரு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் வந்த பயணி ஒருவர், பெரிய பையை கொண்டு வந்தார். பேருந்தில் இருந்த நடத்துநர் அந்த பைக்கும் லக்கேஜ் கட்டண டிக்கெட் வாங்க வலியுறுத்தினார். ஆனால், அந்த நபர் வாங்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே பேருந்து கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தது. நடத்துநர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் அந்நபரை பிடித்து காட்டூர் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் கரூர் மாவட்டம் காயத்திரி நகர் 2-வது வீதியைச் சேர்ந்த குமார்(32) என்பது தெரிந்தது.
அவரது பையை சோதனை செய்த போது, ரூ.80 லட்சம் தொகை அதில் இருந்தது. அதற்கான ஆவணங்கள் குமாரிடம் இல்லை. இதையடுத்து தொகையை கைப்பற்றிய போலீஸார், அது கணக்கில் வராத ஹவாலா தொகையா என அவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில், கரூரில் இருந்து இன்று காலை திருப்பூருக்கு வந்த குமார், அங்குள்ள நிதி நிறுவனத்தில் இருந்து தொகையை வாங்கி பையில் வைத்து எடுத்துக் கொண்டு கோவை சித்தாபுதூரில் உள்ள ஒருவருக்கு அளிக்க வந்தது தெரியவந்தது. மேலும், குமார் இவ்வாறு மூன்று முறை பணத்தை பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது. இதுதொர்பாக காட்டூர் போலீஸார் கூறும்போது, ‘‘மேற்கண்ட ரூ.80 லட்சம் தொகைக்கு முறையான ஆவணங்கள் அவகாசம் அளித்தும் அவர்கள் கொண்டு வரவில்லை. இதையடுத்து கைப்பற்றப்பட்ட தொகை, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது’’ என்றார்.