

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தனர்.
இதையடுத்து காப்பகத்தின் உரிமத்தை ரத்து செய்ய சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதிக்கு, மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பரிந்துரை செய்தார். இதையடுத்து, காப்பக உரிமம் ரத்து செய்யப்பட்டு, காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் உணவு மாதிரிகள், பிரேத பரிசோதனை அறிக்கைகள் முடிவுகளை தொடர்ந்து, அஜாக்கிரதையாக இருந்த காரணத்தால் சிறுவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்திருந்தும், அஜாக்கிரதையாக இருத்தல், இளம் சிறார் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக சேவாலயத்தின் அறங்காவலர் செந்தில்நாதன் (60), விடுதி காப்பாளர் கோபிகிருஷ்ணன் (54) ஆகியோரை திருமுருகன்பூண்டி போலீஸார் நேற்று கைது செய்தனர்.