

உதகை: சோலூர் அருகே சோமர்டேல் எஸ்டேட் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் இரண்டு வாகனங்களில் சுற்றித்திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அருகே சோலூர் சோமர்டேல் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், துப்பாக்கி வைத்திருப்பதாகவும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாடி வருவதாகவும் பைக்காரா வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சோமர்டேல் எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பைக்காரா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 கார்கள் வேகமாக சென்றன. அந்த கார்களை தடுத்து நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசினர். காரை சோதனை செய்தபோது, நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெட்டு கத்திகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், கூடலூர் பகுதியைச் சேர்ந்த குட்டி கிருஷ்ணன், திவாகர், சுரேஷ், மணி, விவேக் என்பதும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "இந்த கும்பல், கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளனர். அவர்களை கைது செய்து, வேட்டையாட பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, கத்தி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்து, வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.