

மதுரை: தமிழகம் முழுவதும் பிளாட் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் சொத்துகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சங்கர சுப்ரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட கிருஷ்ணா குழுமம் என்ற நிதி நிறுவனத்தில் மாத தவனையாக பணம் செலுத்தினால் முதிர்வு காலத்தில் இரண்டே முக்கால் சென்ட் பிளாட் தருவதாக கூறினர்.
இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டது. முழு பணமும் செலுத்தி திட்டம் முதிர்வடைந்ததும் பிளாட்டை பதிவு செய்து தராமல் ஏமாற்றிவிட்டனர். இது குறித்து நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதலீட்டாளர்களின் பணத்தை மீட்டுத் தரும் வகையில் நிறுவனத்தின் அசையும், அசையா சொத்துகளை முடக்கவும், விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சதிகுமார் சுகுமாரா குரூப் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, "வழக்கின் விசாசரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் அதற்கான முறையான அனுமதி பெற வேண்டும். சொத்துகளை முடக்க மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.