உதகை பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

உதகை பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
Updated on
1 min read

உதகை: உதகையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கைதான நர்சரி உரிமையாளர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் சேகர் (50). இவர், நர்சரி நடத்தி வந்தார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் தம்பதிக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். சில நேரங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தம்பதிக்கு நேரம் கிடைக்காத சமயங்களில், அந்த மாணவியை காரில் சேகர் அழைத்துச் சென்றுவந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாககூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மகளின் உடல் நிலை மற்றும் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர், மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில், மகள் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சேகர் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததும், இது குறித்து வெளியில் எதுவும் கூறக்கூடாது என்றும் மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவியும் யாரிடமும் சொல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து சேகரை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் பரிந்துரையின்பேரில், சேகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உள்ள சேகரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in