

சென்னை: சென்னையில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து உரிமம் இல்லாத கைத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீசிங் ராஜா (48). இவர் மீது தமிழகம் மற்றும் ஆந்திர மாநில காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உட்பட 33 வழக்குகள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் சீசிங் ராஜா தனது அடியாட்களுடன், வேளச்சேரியை சேர்ந்த மீனாட்சி என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
சேலம் மாவட்டம் கோவிலூரில் உள்ள மீனாட்சிக்கு சொந்தமான 22.5ஏக்கர் நிலத்தை தனக்கு கிரயம்செய்து கொடுக்குமாறு மிரட்டிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக மீனாட்சி அளித்த புகாரின் பேரில் வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிறிஸ்டோபர் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்தசீசிங் ராஜா உள்ளிட்ட சிலரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், சீசிங் ராஜாவை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து உரிமம் இல்லாத 14தோட்டாக்களுடன் கூடிய கைத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதுவரை சீசிங் ராஜா 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.