

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சோழகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த மாதம் 29-ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள், வழி மறித்து 2 பவுன் செயினை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக காணை போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை அமைக் கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. திருவண்ணாமலை அருகேயுள்ள சோமாசிபாடி கிராமத்திற்குச் சென்ற போது, போலீஸாரை கண்டதும் குற்றவாளிகள் தப்பியோட,துரத்திச் சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(28), அருணாச்சலம்(25), கலையரசன் (19), வீரமணி (26) என்பது தெரியவந்தது. தொடர்விசாரணையில் அவர்கள் 4 பேரும், விழுப்புரம், காணை, கஞ்சனூர், செஞ்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை நோட்டமிட்டு செயின் பறிப்பு மற்றும் செல்போன் வழிபறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் 11 வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் மீது ஏற்கெனவே 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சிவா(28), அருணாச்சலம்(25), கலையரசன், வீரமணி ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 1/2 பவுன் நகை, 6 செல்போன்கள், இரண்டு கத்திகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.