

திருப்பூர்: திருப்பூர் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணித் தாய் மற்றும் கைக்குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அவிநாசியை அடுத்த ஆயிக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (37). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவருடையை மனைவி பிரேமா (32). இவர்களுக்கு கடந்த கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து பிரேமா நிறைமாத கர்ப்பம் தரித்தார். பிரேமாவை கடந்த 2-ம் தேதி திருப்பூர் பல்லடம் சாலை ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு 3-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில கணங்களில் குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக இருந்ததால், குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் தாய் பிரேமாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக பிரேமாவின் உறவினர்கள் கூறும்போது, “பிரேமா 3 மாத கர்ப்பமாக இருந்த காலத்தில் இருந்து ஒரே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஒரே மருத்துவர் தான் சிகிச்சை அளித்தார். தற்போது குழந்தை, சிசு இருவரையும் காப்பாற்ற முடியாமல் போனது எங்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனை தான் இதில் முழுத் தவறு செய்துள்ளது” என்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தாய், கைக்குழந்தை உடல் பிரேமாவின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்துக்கு இன்று எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அவிநாசி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.