

சென்னை: மேற்குவங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஹவுரா விரைவு ரயிலில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.75 லட்சம் ரொக்கத்தை எடுத்த வந்த இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ரயில்களில் போதை பொருட்கள், தங்கம் ஆகியவற்றை கடத்துவதை தவிர்க்கும் வகையில், முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வேபாதுகாப்பு படை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் பத்மாகர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஹவுரா விரைவு ரயில் வந்தது. இதில் இறங்கி வந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது பையை சோதித்தபோது, அதில், ரூ.75 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால், இந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து, அவரை கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவ்விக் மண்டல் (24) என்பதும், தங்கம் வாங்குவதற்காக ஒருவரிடமிருந்து ரூ.75 லட்சம் ரொக்கம் பெற்று வந்ததும், ஆனால்,இந்த பணத்துக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வருமான வரித் துறையினரிடம் ரொக்கம் ஒப்படைக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.