

விழுப்புரம்: சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13- ம் தேதி,பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து ஜூலை 17ம் தேதி ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது.
இந்தக் கலவர வழக்கில், இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களை சின்னசேலம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு போலீஸார், கைது செய்துள்ளனர். இதில், சின்னசேலம் அடுத்த எலியத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (41) என்பவர், போலீஸார் மீது கற்களை வீசி தாக்கியதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், குண்டர் சட்டத்தில் ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த பள்ளி கலவர வழக்கில் இதுவரை 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.