

போபால்: மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் மவுகஞ்ச் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நிபிஹா கிராமத்தில் உள்ள வைக்கோல் போரிலிருந்து கடந்த 24-ம் தேதி எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அந்த எலும்புக்கூட்டில் மண்டையோடு இல்லை. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அது அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள உம்ரி பட் கிராமத்தைச் சேர்ந்த ராம்சுஷில் பால் (42) என்பவரது எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.
ராம்சுஷிலின் மனைவி ரஞ்சனா பாலுக்கு, தனது மைத்துனருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. அதற்குத் தடையாக இருந்த கணவரை, மைத்துனரின் உதவியுடன் கொலை செய்து உடலை வைக்கோல் போரில் மறைத்து வைத்துள்ளார். இந்த சம்பவம் 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்துள்ளது. 17 மாதங்களுக்குப் பிறகு கொலைநடந்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மவுகஞ்ச் போலீஸ் நிலைய பொறுப்பாளர் ஸ்வேதா மரியா கூறியதாவது: எலும்புக்கூடு இருந்த பகுதியில் தடயங்களைச் சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். நீண்ட நாட்களாக ராம்சுஷில் பால் காணாமல் போன விவரத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். ராம்சுஷிலுக்கு விஷத்தைக் கொடுத்து கொலை செய்து, மைத்துனர் குலாப் பால் உதவியுடன் உடலை வைக்கோல் போரில் மறைத்துள்ளார் அவரது மனைவி ரஞ்சனா. பின்னர் குலாப் பால், தனது குடும்பத்தினரின் உதவியுடன் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி விட்டனர். பின்னல் உடல், குலாபின் தந்தைக்குச் சொந்தமான பண்ணை நிலத்தில் உள்ள வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஞ்சனா, குலாப், குலாபின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.