

கும்பகோணம்: சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உட்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சுத்தமல்லியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 2008-ம் ஆண்டு20 சிலைகள் திருடு போயின.
ஒருவர் அப்ரூவர்: இதில், தொடர்புடைய அமெரிக்காவில் வசித்த சுபாஷ் சந்திர கபூர், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், ராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன், பிச்சுமணி ஆகிய 7 பேரை, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், பிச்சுமணி அப்ரூவரானார். இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், சுபாஷ் சந்திர கபூரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தனர். மீதமுள்ள 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதைத்தொடர்ந்து, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நேற்று மாலை தீர்ப்பளித்தார். அதில், சுபாஷ் சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார், மாரிச்சாமி, ராம் (என்கிற) சுலோகு,பார்த்திபன் ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும், சுபாஷ் சந்திரகபூருக்கு ரூ.4 ஆயிரம், மற்ற 5 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
புழல் சிறையிலடைப்பு: சுபாஷ் சந்திரகபூர் திருச்சி மத்திய சிறைக்கும், சஞ்சீவி அசோகன், பாக்கிய குமார் ஆகியோர் புழல் சிறைக்கும் மற்ற 3 பேரும் மதுரை சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.