

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டன; பலர் காயமடைந்தனர். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல், பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்துவைக்க தடை விதிக்கப்பட்டது. தடையை மீறுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவது கணிசமாகக் குறைந்தது. இந்நிலையில், ஒரு சிலர் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் ரகசியமாக விற்பனை செய்து வருவதாகச் சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.
ரூ.600-க்கு 50 காற்றாடி: இந்நிலையில், முக்கிய நபர் ஒருவர் தொடர்ந்து ஆன்லைனில் காற்றாடி விற்பனை செய்து வருவதை திருமங்கலம் காவல் நிலைய போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீஸார், வாட்ஸ்-அப் மூலம் காற்றாடியை ஆர்டர் செய்தனர். அதாவது 50 காற்றாடிகள் அடங்கிய பண்டல் 600 ரூபாய்க்கு ஆர்டர் செய்தனர். அவற்றை டெலிவரி செய்ய ஒருவர் வந்தபோது அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அந்த நபர் அளித்த தகவலின்படி, சென்னை அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோயில்தெருவில் உள்ள ஒரு வீட்டில்சோதனை நடத்தி 1500 காற்றாடிகள், பண்டல், பண்டலாக மாஞ்சா நூல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 600 நூல் உருண்டைகள் மற்றும் 4 ராட்டைகள்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸார் தேடுவதை அறிந்துகொண்ட மாஞ்சா நூல் தயாரிக்கும் நபரானபார்த்திபன் (29) என்பவர் தப்பிவிட்டார். பின்னர் செல்போன் சிக்னல் டவர் உதவியுடன் நேற்று முன்தினம் பார்த்திபனை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் இதுபோல் வாட்ஸ்-அப் குழு அமைத்து ஆன்லைன் மூலம் காற்றாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்து வருவது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.