

கோவை: கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர் கண்காணிப்புப் பணி தொடர்கிறது.
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, கோவையில் ஏற்பட்ட பதற்றமான சூழலை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்களைத் தடுக்கவும் காவல்துறையினரின் பாதுகாப்பு மாநகர் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நிரந்தர சோதனைச் சாவடிகளில் 4-க்கும் மேற்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், ரத்தினபுரி உள்ளிட்ட மாநகர் முழுவதும் முக்கியமான 40 இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஹோப்காலேஜ், ஆவாரம் பாளையம், ஆத்துப்பாலம், கிருஷ்ணசாமி சாலை, டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள புறக்காவல் நிலையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட ஆயிரம் காவலர்கள், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரம் காவலர்கள் என மொத்தம் 3 ஆயிரம் காவலர்கள் மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவிர, இவர்களுக்கு உதவியாக துணை ராணுவமான அதிவிரைவுப் படையினரும் 200 பேர் (2 கம்பெனி) கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவைக்கு பாதுகாப்புப் பணிக்கு வந்த காவலர்கள் தங்குவதற்காக திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், காவலர் சமுதாயக் கூடம் உள்ளிட்ட இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், கோட்டை பெரிய மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மாநகரில் காவல்துறையினர், துணை ராணுவத்தினரின் கண்காணிப்பு தடையின்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகி றது,’’ என்றார்.