

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் பசும்பொன் தேவர் குருபூஜைக்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் கார் கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 5 பேர் காயமடைந்தனர். 10 கார்கள் சேதமடைந்தன.
பசும்பொனில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன் உள் ளிட்டோர் நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். மானாமதுரை தல்லாகுளத்தில் உள்ள வைகை ஆற்றுப் பாலத்தில் சென்றபோது,
முன்புறம் சென்ற அதிமுக நிர்வாகி ஒருவரது கார் திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளின் கார்கள் அடுத்தடுத்து, நின்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளாகின. இதில் அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன் (50), தமிழ்ச்செல்வன் (68), ஜோதிபாசு (46), மதியழகன் (45), தங்கதுரை (62) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 10 கார்களும் பலத்த சேதமடைந்தன. தங்களது கார்கள் சேதமடைந்ததையடுத்து முன்னாள் அமைச்சர்கள் வேறு கார்களில் பசும்பொன்னுக்குப் புறப்பட்டுச் சென்றனர். மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.