

ஈரோடு: கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி, ஈரோடு இளைஞரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (25). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டு முகவரிக்கு தபால் வந்தது. அதில், உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது. மேலும், விவரம் அறிய செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த எண்ணை தொடர்பு கொண்டு அஜித்குமார் பேசினார். மறுமுனையில் பேசியவர், “உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது. கார் அல்லது அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். மேலும், காருக்கு பதிவுக் கட்டணம், வரி, ஜிஎஸ்டி, என பல்வேறு காரணங்களைக் கூறி பல தவணைகளில் அஜித்குமாரிடம் ரூ.14 லட்சத்தை அந்த நபர் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளார்.
ஆனால், கூறியபடி காரை அனுப்பவில்லை. மேலும், செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஜித்குமார் இது தொடர்பாக ஈரோடு சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர். மேலும், மோசடி செய்தவரின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.