

மறைமலை நகர்: செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரம் மலைப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின்போது வெடிக்காமல் போன 3 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. இவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே அனுமந்தபுரம் மலைப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது ராணுவ வீரர்கள் பயன்படுத்திய 3 சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் வெடிக்காத நிலையில் கிடந்ததை அப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் பார்த்து மறைமலை நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீஸ் விரைவு: இதையடுத்து அங்கு சென்ற கூடுவாஞ்சேரி உதவி காவல் ஆணையர் சிங்காரவேலன், மறைமலை நகர் காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழத்தல் துறை அதிகாரிகள் வெடிகுண்டுகளை மீட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். விரைவில் நீதிமன்ற அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.