

திருவள்ளூர்: ஆவடி அருகே பாலியல் வன்கொடுமை செய்து, 4 வயது சிறுமியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கும், கொலையை மறைத்த அவரது மனைவிக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே அண்ணனூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த, முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சிசுந்தரம் (63), சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, அவர், சிறுமியின் சடலத்தை, சிறுமி வீட்டின் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக திருமுல்லைவாயில் போலீஸார், மீனாட்சிசுந்தரம் மற்றும் கொலையை மறைத்த, அவரது மனைவி ராஜம்மாள்(57) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. அதில், மீனாட்சிசுந்தரம், ராஜம்மாள் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, 4 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்திராதேவி நேற்று அளித்தார்.
அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த மீனாட்சிசுந்தரத்துக்கும், கொலையை மறைத்த குற்றத்துக்காக ராஜம்மாளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும்,அரசு, சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிபதி தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீனாட்சிசுந்தரம், ராஜம்மாள் ஆகியோர், சென்னை- புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.