

சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடியை கொன்று விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய இருவரை போலீஸார் துரத்திப் பிடிக்க முயன்றனர். அப்போது, வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
மேட்டூர் தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் பெயின்டர் ரகுநாதன் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரகுநாதனும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையனும் (37) சேர்ந்து, அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். வெள்ளையனிடம் இருந்து ரகுநாதன் பிரிந்து சென்று, வேறு ஒரு கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டார்.
கடந்த 24-ம் தேதி, இரவு, வெள்ளையன் மற்றும் அவரது நண்பர்கள் ரகுநாதன் வீட்டுக்கு சென்று, தகராறில் ஈடுபட்டு, தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த ரகுநாதன், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர சென்றார். அப்போது, அங்கு வெள்ளையன் மற்றும் நண்பர்கள் மூர்த்தி, பிரகாஷ், நிவேஷ் நால்வரும் சேர்ந்து ரகுநாதனை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
தகவல் அறிந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் கொலையாளிகளை பிடிக்க தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் பிடியில் இருந்து தப்பிய வெள்ளையனும், மூர்த்தியும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கீழே விழுந்ததில் கால்முறிந்து பலத்த காயம் அடைந்தனர். இருவரையும் போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ், நிவேஷ் உள்பட நால்வரையும் போலீஸார் கைது செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அரசு மருத்துவமனையில் இருந்த சிசிடிவி-யில் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது. அதில் ரகுநாதனை கத்தியால் குத்தி, கழுத்தை அறுக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.