மதுராந்தகம் | மின்கம்பம் சாய்ந்து உயிரிழந்து புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மாயம்: மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் வலை

மதுராந்தகம் | மின்கம்பம் சாய்ந்து உயிரிழந்து புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மாயம்: மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் வலை
Updated on
1 min read

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் உடல் சித்திரவாடி மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், மயானத்தில் பூஜை செய்து புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலில் இருந்து தலையை எடுத்து சென்ற மர்மநபர்களை, சித்தாமூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சித்திரவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (12). 6-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறையில் அவுரிமேடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது, கடந்த 5-ம் தேதி வீட்டு முன்பு உள்ள சாலையில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியின் வார்டு உறுப்பினர் மூலம் மின் கம்பத்தில் பழுதடைந்திருந்த தெருமின் விளக்கை சரிசெய்ய முயன்றபோது, ஏற்கெனவே சேதமடைந்திருந்த மின்கம்பம் சாய்ந்து கீழே இருந்த சிறுமியின் மீது விழுந்து படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி கிருத்திகா உயிரிழந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு கடந்த 15-ம் தேதி சித்திரவாடி பகுதியில் உள்ள மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில் மயானத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் பூஜை செய்யப்பட்டிருப்பதை, நேற்று காலை அப்பகுதியாக சென்ற கிராமத்தினர் பார்த்துள்ளனர். மேலும், எலுமிச்சைபழம், மஞ்சள்தூள், குங்குமம் போன்ற பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சித்தாமூர் போலீஸார் விரைந்து வந்தனர். இதையடுத்து, மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி துரைப்பாண்டி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில், சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அப்போது, சிறுமியின் உடலில் தலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மறு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் தலையை எடுத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து சித்தாமூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயானத்தில் புதைக்கப்பட்ட உடலில் இருந்து தலை வெட்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in