ஆந்திராவில் 40 குரங்குகள் உயிரிழப்பு: விஷம் கொடுக்கப்பட்டதா என வனத்துறை விசாரணை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சிலகம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் சுமார் 40 குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யாரோ விஷம் வைத்து இந்த நாச வேலையை செய்துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அடர்ந்த புதருக்குள் இறந்த நிலையில் குரங்குகளின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயங்கிய நிலையிலும் சில குரங்குகள் இருந்துள்ளன. அதனை காக்கும் நோக்கில் உள்ளூர் மக்கள் அதற்கு உணவு கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் உணவை உட்கொள்ளும் நிலையில் அவை இல்லை. இந்தத் தகவலை உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட குரங்குகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இதற்கு முன்னர் இந்த மாதிரியான சம்பவம் இங்கு நடந்தது இல்லை. யாரோ சிலர் டிராக்டரில் குரங்குகளை கொண்டு வந்துள்ளனர். கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சுமார் 40 முதல் 45 குரங்குகள் பலியாகி உள்ளன. உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கை ஐந்து நாட்களுக்கு பிறகுதான் கிடைக்கும். வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in