கோவை கார் வெடிப்பு சம்பவம் | குன்னூரை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை

கோவை கார் வெடிப்பு | கோப்புப் படம்
கோவை கார் வெடிப்பு | கோப்புப் படம்
Updated on
1 min read

குன்னூர்: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, குன்னூரில் இன்று இரண்டாவது நாளில் மேலும் ஒருவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சப்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் உயிரிழந்தவர் பழைய துணி விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்த ஜமோசா முபின் என்பதும், இவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது பின்னணி குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து சம்பந்தமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த உமர் பரூக் (35) என்பவரை பிடித்து கோவை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். செல்போன் சிக்னல் செயல்பாடு அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாகவும், இவர் குன்னூர் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வந்து வீடு எடுத்து தங்கி உள்ளார் என்றும், போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று அதே பகுதியில், கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஆய்வாளர்கள் சுபாஷினி, பிருத்திவ்ராஜ் உட்பட போலீஸார் மற்றொருவரின் வீட்டில் 2 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, அந்நபரை அங்கிருந்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக ஏடிஎஸ்பி. கிருஷ்ணமூர்த்தி கூறும்போது: "குன்னூரில் இருந்து அழைத்துச் சென்ற நபருடன் தொடர்பில் இருந்த மற்றொருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளோம்" எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in