கோவை கார் வெடிப்பு சம்பவம் | கோயிலை தகர்க்க நடந்த சதியா? - போலீஸ் விசாரணை

எரிவாயு உருளை வெடித்து தீப்பிடித்த கார்.
எரிவாயு உருளை வெடித்து தீப்பிடித்த கார்.
Updated on
2 min read

கோவை: எரிவாயு உருளை வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பழமையான சங்கமேஸ்வரர் கோயிலை தகர்க்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடத்தை அடுத்த, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே நேற்று அதிகாலை மாருதி 800 கார் வந்த போது, திடீரென வெடித்து கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற உக்கடம் போலீஸார், கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். காரில் இரண்டு சமையல் எரிவாயு உருளைகள் இருந்ததாகவும், அதில் ஒரு எரிவாயு உருளை வெடித்து தீப்பிடித்ததாகவும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்து நடந்த பகுதியில் இருந்து பால்ரஸ் குண்டுகள், ஆணிகள், சிறுவர்கள் விளையாடும் கோலிக்குண்டுகள் ஆகியவற்றை முக்கிய தடயமாக தடய அறிவியல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மேற்கண்ட பொருட்கள் கிடைத்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை வலுப்படுத்தும் வகையில், காரை ஓட்டி வந்து உயிரிழந்த நபர் தொடர்பான எந்த ஒரு க்ளூவும் போலீஸாருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

காரின் பதிவெண் விவகாரம்: காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்த போது பழைய உரிமையாளரின் பெயரை காட்டுகிறதே தவிர, தற்போதைய உரிமையாளர் யார் எனத்தெரியவில்லை. காரின் இன்ஜின் சேஸ் எண்ணும் வேறு ஒருவரை உரிமையாளராக காட்டுவதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு கார்களின் உதிரிபாகங்களை இணைத்து இந்த காரை தயார் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே, மேற்கண்ட சம்பவம் எதேச்சையாக நடக்கவில்லை, திட்டமிட்ட சதி செயலாக இருக்கலாம் என தங்களது சந்தேகங்களை போலீஸார் ஓரளவுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். தீபாவளிப் பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் எடுக்க மக்கள் வரும் அதிக வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் டவுன்ஹாலை சுற்றியுள்ள பெரியகடைவீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி ஆகியவை முக்கியமானதாகும். இங்கு ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக ப ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மேற்கண்ட வர்த்தகப் பகுதிக்கு வந்துச் செல்கின்றனர். விபத்தில் சிக்கிய காரும் டவுன்ஹால் நோக்கிய வழித்தடத்தில் தான் வந்துள்ளது. எனவே, புத்தாடைகள் எடுக்க வரும் மக்கள் கூட்டத்தை இலக்காக வைத்து வெடிபொருட்களுடன் காரில் வந்தபோது, மேற்கண்ட இடத்தில் எதேச்சையாக விபத்து நடந்திருக்கலாம் அல்லது சமீப நாட்களாக நாட்டில் நடந்த சில சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள் பழமை வாய்ந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலை தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என வெவ்வேறு கோணங்களில் சந்தேகத்தை திருப்பி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டிஜிபி உள்ளிட்டோர் ஆய்வு: மேலும், கார் சுத்தமாக உருக்குலைந்து போக சமையல் எரிவாயு உருளையில் இருந்து வாயு மட்டும் காரணமாக இருந்திருக்காது, காரில் வெடிமருந்து வைக்கப்பட்டு, அதுவும் அதீத தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஏனெனில், பல்வேறு இடங்களில் சிலிண்டர் வெடி விபத்துகள் நடக்கின்றன. அங்கெல்லாம் டிஜிபி, ஏடிஜிபி அந்தஸ்த்திலான உயரதிகாரிகள் நேரடியாக சென்று விசாரிப்பதில்லை. ஆனால், நேற்று நடந்த சம்பவத்தின் போது, உயரதிகாரிகள் மட்டுமின்றி, வெடிபொருள் கண்டறியும் நிபுணர்கள் குழுவினரும் வந்து ஆய்வு நடத்தியது இவ்விபத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. எனவே, தடய அறிவியல் துறையினர் விபத்து நடந்த காரில் வெடிபொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை அணு அணுவாக ஆய்வு செய்து சேகரித்தனர். மேலும், உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறிந்து அதைத் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில் தான், இங்கு நடந்தது விபத்தா அல்லது சதிச்செயலா? அவ்வாறு சதிச்செயலாக இருந்தால் அதை எங்கு அரங்கேற்ற திட்டமிடப்பட்டிருந்தது, திட்டமிட்ட இடத்தை நோக்கி செல்லும் போது இங்கு முன்கூட்டியே வெடித்து விட்டதா என்பது போன்ற சந்தேகங்கள் நிவர்த்தி பெறும்.

விசாரணை தீவிரம்: இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் மூலம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனுமானத்தின் பேரில் தற்போது எதுவும் கூற முடியாது. காரில் வெடிமருந்துகள் இருந்ததாக, அது தான் தீ விபத்துக்கு காரணமாக என்பதை தற்போது உறுதியாக கூற முடியாது, அதுதொடர்பான ஆய்வறிக்கைகள் வந்த பின்னரே தெரியவரும். விசாரணையின் இறுதியில் அனைத்தும் தெரியவரும்,’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in