

மும்பை: மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அனீஸ் அன்சாரி(32) என்ற கம்ப்யூட்டர் இன்ஜினீயர் பணியாற்றினார். இவர் அலுவலகத்தின் கம்ப்யூட்டர்கள் மற்றும் இன்டர்நெட் இணைப்பை தவறாக பயன்படுத்தி, அமெரிக்காவைச் சேர்ந்த உமர் எல்ஹாஜி என்பவருடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டார்.
எல்ஹாஜியுடன் ஐ.எஸ் தீவிர வாத அமைப்பின் கொள்கைகளை பகிர்ந்தார். மும்பைபாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள அமெரிக்கன் பள்ளியில், தனிநபராக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அங்கு பயிலும் வெளிநாட்டினரின் குழந்தைகளை கொல்லவும் சதி திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக இவர் தெர்மைட் வெடிகுண்டு தயாரிக்கும் தகவல்களையும் திரட்டினார். சைபர் தீவிரவாத குற்றத்தில் ஈடுபட்டதற்காக இவர் 2014 அக்டோபர் 18-ம் தேதியில் இருந்து சிறையில் உள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66(எப்) பிரிவின் கீழ் மீது பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில், சைபர் தீவிரவாத குற்றத்தில் ஈடுபட்ட அனீஸ் அன்சாரிக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏஜாக்லேகர் நேற்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தடை செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பியது, தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக அனீஸ் அன்சாரி இருந்துள்ளார் என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.
முன்னதாக நடந்த விவாதத்தில் சிறப்பு அரசு வக்கீல் மதுக்கர் தால்வி வாதிடுகையில், ‘‘குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்’’ என்றார்.
அன்சாரி வழக்கறிஞர் ஷரீப் ஷேக் வாதிடுகையில், சிறையில் அனீஸ் கழித்த காலத்தை தண்டனை காலமாக கருத வேண்டும். அவரது வயது, கல்வித் தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்த நீதிபதி, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்ய முடியாது என்றார்.