

தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனை பாதுகாப்பாக மீட்டு தருமாறு அவரது தாய், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்தனர். இதில் இருவரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. இதன்பிறகு, அவர் தலைமறைவானார். இந்நிலையில், அவரது தாய் சியாமளா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றுஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
என் மகள் மீரா மிதுன் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது. ஆக.3-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட அவர்,தான் தங்கியுள்ள ஓட்டலுக்கு அழைத்தார். நான் சென்று அவரை வீட்டுக்கு அழைத்து வந்தேன். ‘‘போலீஸார் என்னை கைது செய்யப் போகின்றனர்’’ என்று புலம்பிய மீரா, அடுத்தநாள் மீண்டும் ஓட்டலுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, அவரது செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால், மீரா சார்பாகநீதிமன்றத்தில் நான் ஆஜரானேன். மன அழுத்தம், கைது நடவடிக்கைக்கு பயந்து மீரா ஓடிவிட்டார் என்பதை தெரிவித்தேன்.
கடந்த 8 ஆண்டுகளாக மீரா, வெளியேதான் தங்கியுள்ளார். உதவி தேவைப்பட்டால் மட்டுமே என்னை தொடர்பு கொள்வார். போலீஸ் அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்தபோது, மீராவின் இருப்பிடத்தையும், அவரது 2 செல்போன் எண்களையும் தெரிவித்தேன். அவரை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டேன்.
பெங்களூருவில் உள்ள அவரது 2 தோழிகள் மற்றும் என் மகளுடன் கைதான சாம் அபிஷேக்கையும் விசாரித்தால், மீராவின் நண்பர்கள், மீரா தங்கும் இடங்கள் பற்றி தெரியும். இதுதொடர்பாக விசாரித்து, என் மகளை பாதுகாப்பாக மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.