

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த இளைஞரை 7 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து, நகையை மீட்டனர். தூத்துக்குடி மகிழ்ச்சி புரம் பகுதியை சேர்ந்த காமராஜ்மனைவி கவிதா (42). இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் டூவிபுரம் பகுதியில் சென்ற போது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கவிதா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்தபகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி ராஜகோபால் நகரைசேர்ந்த சங்கரலிங்கம் மகன் கண்ணன் (23) என்பவர் கவிதாவிடம் சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. போலீஸார் கண்ணனை கைதுசெய்து அவரிடமிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் நகை பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை 7 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீஸாரை எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.
கோவில்பட்டி: கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் அசோக் (24), கட்டிட ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமாரகிரி பகுதியில் சென்ற போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள், அசோக் மீது மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 1.5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு காட்டுப்பகுதி வழியாக தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து அசோக் அளித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.