

களியக்காவிளை அருகே நுள்ளிகாட்டை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11). அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24-ம் தேதிபள்ளிக்கு வந்த சீருடை அணிந்த நபர் ஒருவர் அஸ்வினுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை பருகியஅஸ்வின் உடல் நலம் பாதிக்கப்பட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அஸ்வின் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருந்ததாகவும், இதனால் அவரின் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்து மரணமடைந்ததாகவும் களியக்காவிளை காவல் நிலையத்தில் அஸ்வினின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.
அதங்கோடு பள்ளியில் தலைமை ஆசிரியர், மாணவர்கள், ஆசிரியர்களிடம் விவரங்கள் கேட்டறியப்பட்டது. நேற்று அஸ்வினின் தாயார் சோபியாவிடம் விவரங்களை கேட்ட போலீஸார், பள்ளிச்சீருடையில் வந்த நபர் ஆசிட்கலந்த குளிர்பானத்தை அஸ்வினிடம் கொடுத்திருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.
அவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவரா? அல்லது வெளியில் இருந்து சீருடையில் வந்தவரா? அஸ்வினிடம் அவர் குளிர்பானம் கொடுக்க காரணம் என்ன? போன்றவை குறித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மற்றும் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர்.