

குருகிராம்: தலைநகர் டெல்லியின் குருகிராம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை 48-இல் அந்த பெண்ணின் உடல் இருந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் வயது 20 என்றும். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021-இல் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் குருகிராம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதனால் திருமணத்திற்கு பிறகு தம்பதியர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
தம்பதியர் இருவருக்குள்ளும் சின்ன சின்ன சண்டைகள் நடந்து வந்துள்ளது. அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். தன்னிடம் மொபைல், டிவி போன்ற பொருட்கள் வேண்டும் என மனைவி சண்டை பிடித்ததாக விசாரணையில் கொலையாளி தெரிவித்துள்ளார். வழக்கம் போல கடந்த 17-ம் தேதி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கொலையாளி தன் மனைவியை கொன்றுள்ளார். தொடர்ந்து மறுநாள் காலை புதிய சூட்கேஸ் ஒன்று வாங்கி, மனைவியின் உடலை அதி அடைத்து, இ-ரிக்ஷாவில் சென்று, தேசிய நெடுஞ்சாலை 48 அருகில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இருந்த புதரில் சூட்கேஸை போட்டுள்ளார். தடயத்தை மறைக்கும் விதமாக மனைவியின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த தனது பெயரை அழித்துள்ளார். அதோடு அடையாளத்தை மறைக்க வேண்டி ஆடைகளையும் அகற்றி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை தொடர்பாக தன் மீது சந்தேகம் வரக்கூடாது என எண்ணி தனது மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளதாக அக்கம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சூட்கேஸை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அடையாளம் கண்டு, போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத பெண் சடலம் என வழக்கு பதிந்து விசாரணை தொடங்கியுள்ளனர் போலீஸார். தங்களுக்கு கிடைத்த உள்ளூர் வாசிகளின் தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அந்த ரிக்ஷாவை அடையாளம் கண்ட போலீஸார் கொலையாளியை கைது செய்துள்ளனர்.