கேரள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் தலைமறைவான குற்றவாளி கண்டுபிடிப்பு - 2 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் கைது

கேரள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் தலைமறைவான குற்றவாளி கண்டுபிடிப்பு - 2 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் கைது
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியால், தலைமறைவாக இருந்த குற்றவாளியை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.ராஜேஷ். இவர் 15 வயது சிறுமியை கொலை செய்து, அவள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றார். மேலும், சிறுமியின் உடலை புதைத்து விட்டார். இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ராஜேஷுக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின், அவரது தண்டனையை உயர் நீதிமன்றம் குறைத்து ஆயுள் தண்டனையாக தீர்ப்பளித்தது. இதையடுத்து திருவனந்தபுரம் சிறையில் ராஜேஷ் அடைக்கப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா பரவல் அதிகரித்த போது, அவரது நன்னடத்தையை வைத்து திருவனந்தபுரம் மாவட்டம் நெட்டுகல்தேரியில் உள்ள திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போது திறந்வெளி சிறையில் இருந்து ராஜேஷ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி ஸ்ரீனிவாசன் என்பவருடன் தப்பிச் சென்றார். இருவரையும் போலீஸார் தேடி வந்தனர். இதில் ஸ்ரீனிவாசன் மட்டும் 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டார். ஆனால், ராஜேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய இந்த வழக்கை போலீஸார் கைவிட வேண்டியதாகிவிட்டது. இந்நிலையில், கேரளாவின் பிரபல செய்தி சேனல் மாத்ரூபூமி தொலைக்காட்சி, ‘தேடப்படும் குற்றவாளிகள்’ (மோஸ்ட் வான்டட்) என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. கடந்த வாரம் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் முக்கியமாக ராஜேஷ் பற்றிய விவரங்கள் புகைப்படத்துடன் வெளியாயின. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேஷ் பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பெரும் திருப்பத்தை கொண்டு வந்தது.

கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கர்நாடக மாநிலம் கொல்லூரில் குடியேறியுள்ளார். அவர் மாத்ரூபூமி தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து, ராஜேஷை அடையாளம் கண்டு கொண்டார். தனது பெயரை மாற்றிக் கொண்டு ரப்பர் மர தோட்டத்தில் பால் எடுக்கும் தொழிலாளியாக ராஜேஷ் பணிபுரிந்து வந்ததை அறிந்து கொண்டார். உடனடியாக கர்நாடக போலீஸில் தனது நண்பராக உள்ள உதவி ஆய்வாளருக்கு தகவலை தெரிவித்தார். அதன்பின், ராஜேஷின் புகைப்படத்தை வைத்து கர்நாடக போலீஸார் ராஜேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் கர்நாடகா வந்த கேரள போலீஸிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து கேரள போலீஸ் உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜெயன் என்ற பெயரில் உடுப்பி மாவட்டம் மாதுர் பகுதியில் ரப்பர் மரத் தோட்டத்தில் ராஜேஷ் வேலையில் சேர்ந்துள்ளார். கடந்த ஆண்டு
திருமணமும் செய்து கொண்டுள்ளார். சிறையில் இருந்து தப்பியோடிய ராஜேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியால் 2 ஆண்டுக்குப் பிறகு சிக்கியுள்ளார். இந்த நேரத்தில் அவரை அடையாளம் கண்டு
தகவல் தெரிவித்தவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்க இருக்கிறோம். இதுபோன்ற விழிப்புணர்வு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் எதிர்காலத்தில் மேலும் பல குற்றவாளிகள் சிக்க வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in